பறம்புநாட்டு மன்னர் "பாரிவள்ளல் முத்தரையர்" - (முல்லைக்கு தேர்கொடுத்த வள்ளல்).
King Paari Vallal |
பறம்பு நாடு :
பறம்பு மலை என்ற பிரான்மலை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது.
மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும். பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி ஆண்டு வாழ்ந்த மலையாகும்.
பிரான்மலை - பாரிமுத்தரையர் நாடு. |
இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.
"ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.
பாரிவள்ளல் வரலாறு :
வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாக பாரியை தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழு கொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச் செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலை சிறந்தவராக போற்றப்படுகின்றார்.
இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ் பெற்ற சுந்தரர் – ‘திருத்தொண்டத் தொகை’ என்ற புகழ் பெற்ற பதிகத்தைப் பாடியவர் – பாரியையே கொடைக்கு எல்லையாக சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்கத் தொகை நூலுள் பல உள்ளன.
பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள். பல காலம் முற்றுகை இட்டும் வெற்றி கிடைக்கவில்லை.
மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க் களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும். அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக் கேட்டார்கள்.
நாங்களும் பலக் காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரி கோட்டைக்குள் இருந்துக் கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக் கேட்டார்கள்.
கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது. வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும், கிழங்குகளும் உள்ளது. மேலும் மூங்கில் நெல் உள்ளது. அவற்றைக் கொண்டே உணவுத் தேவையை சமாளித்துக் கொள்ள முடியும். நீங்கள் ஆண்டுக் கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.
அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக் கேட்டதர்க்கு, போரில் அவரை வெல்ல முடியாது. ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தை கேட்டாலும் கொடுத்து விடுவார். அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப் பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக் கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக் காட்டினார் கபிலர். மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்து விட்டார். இப்போது இருப்பது இந்த மலையும், அரண்மனையும் மட்டுமே என்றார்.
ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப் பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.
மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள், என்னிடம் இருப்பது எதைக் கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும், உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக் கேட்டாலும் எப்படி உயிரைக் கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக் கூடாது என்று வாளை எடுத்து வைத்து விட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.
இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப் பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாள்களை பாரி மீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.
பாரி இறக்கும் தருவாயில் அவரது மகள்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை. நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இல்லை எனாது, கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.
பாரிவள்ளல் ஆண்டு கொண்டிருந்த பறம்பு நாடு எத்தகைய மக்களைப் பெற்றது, எத்தகைய செல்வத்தைப் பெற்றது? பாரி இறந்த பின் பாரியின் இரு பெண்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்த கபிலர், இப்புறநானூற்றுப் பாடல் வழி, தனது கலக்கத்தை கூறுமிடத்து, பறம்பு நாட்டின் செல்வத்தைப் பற்றிப் பாடுகிறார்.
(புறம்: 113).
இப்பகுதியில் பாரியின் வம்சவழியாக வாழும் 'முத்தரையர் மக்கள்' தன் குழந்தைகளுக்கு பாரி, பரிதி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் தன்மரபு பெயர்கள் வைத்துவரும் பழக்கமும் காலங்காலமாக தொன்றுதொட்டு வருகிறது.
முல்லைக்கு தேர்தந்த மன்னர் பாரி வள்ளல். |
இருப்பினும் பாரி நாட்டின் உரிமையானவர்களாகவும் பாரின் வம்சவழியினராகவும் ஒரு பிரிவினரே உள்ளார்கள். பறம்பு மலையை சுற்றி முழுவதும் பாரியின் மக்களாக தமிழ் இன ஆதி போர்க்குடியான 'வலையர் சாதிய முத்தரையர்' சமுகத்தினரே பறம்புமலை சுற்றியும் பாரி நாடு பகுதியெங்கும் பெரும்பாண்மையாக நிறைந்து வாழ்கின்றனர்.
இவர்கள் தாங்களின் சாதிய அடையாள பட்டப்பெயராக பாரி நாட்டார், பறம்பு நாட்டார், பாரி வலையர், பரிதிவலையர், பாரி மூப்பர், மூப்பனார், பாரி, பறம்பன், பறம்பு, பிடாரன், மலையான், பாரி வலையன் என பறம்புமலையையும், பாரியின் வம்சத்தை உணர்த்தும் வகையாகவும் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
பாரி நாடு :
தென்னெல்லை - திருமோகூர் முதல் கீழ் மேலோடிய வைகையாற்றங்கரை - பறம்புக்குடி.
கிழக்கெல்லை - பறம்புக்குடி- காளையார் கோயில் - முத்து நாடு - அனுமந்தக் குடி- பறம்பு வயல்.
வடவெல்லை - பறம்பு வயல் - கானாடுகாத்தான், சோனாபட்டு - திருக்கோளக்குடி - பூலாங்குறிச்சி - இடையாற்றூர் குடுமியான் மலைப்புறம் - பறம்பூர்.
மேற்கெல்லை - பறம்பூர் - மருங்காபுரி - துவரங்குறிச்சி - நத்தம் மலைகளின் கிழக்குப் பகுதி - அழகர் மலைக் கிழக்குப் பகுதி - பறம்புக் கண்மாய் - திருமோகூர் போன்ற பகுதிவரை பறம்புமலையை தலைமையாக கொண்ட எல்லைகளாக பரவி நாடாண்ட பாரி மன்னரின் நாடாக இருந்ததை நம்மால் காணமுடிகிறது.
பாரிவேட்டை பாரம்பரியம் :
( பாரிவேட்டையும் வலையர் மக்களின் பாரம்பரியமும் ).
பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை பாரம்பரியம் அரசமரபினரில் இப்போதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பறம்பு மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் முத்தரையர் சமூக மக்கள் இந்த வேட்டையை பாரம்பரிய மரபாக நடத்தி வருகின்றனா். மேலும் பிற பகுதி முத்தரையர் மக்களும் ராஜ வம்ச சடங்குகளாக நாகரீகத்துடன் வருடம் ஓர்முறை இந்த பாரிவேட்டை மற்றும் வேடுபறி நிகழ்வை கடைப்பிடிக்கின்றனர்.
பண்டைய வரலாற்றில் வேட்டையின் பங்கு முக்கியமான ஒன்றாகும். ஆதி காலத்தில் வீரத்தை நிலைநாட்டி சிங்க தமிழர்களாய் அரசகுடியாளர்கள் வேட்டை நாகரீகத்துடன் வேட்டையாடியே உணவுண்டுவந்தார்கள் நம் மூதாதையர்கள். நாகரீகம் மற்றும் மொழி வளர்ச்சி பெருமளவில் இல்லா முற்காலத்தில் இவர்கள் காடு, வயல், மலை, ஆழ்கடல் போன்ற பகுதியில் விலங்குகள், மீன், பறவை போன்றவற்றை வேட்டையாடி உணவுண்டும், தன்முன்னோர்களான குலதெய்வங்களுக்கு படைத்து வழிபட்டும் வாழ்ந்துவந்தனர். வேட்டையாடுவதை பாரம்பரியமாகவும், மீன்பிடித்தலை தொழிலாகவும் முத்தரையர்களில் - வலையர், பாரிவலையர், மூப்பர், அம்பலக்காரர், சேர்வை, காவல்காரர், மூப்பனார், வேட்டுவகவுண்டர் மக்கள் இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
இவர்களின் உட்பிரிவு சாதிய அடையாளமாக வேடுவர், வலையர், வேட்டைக்காரர், வேட்டுவ வலையர், வேட்டைக்கார நாயக்கர், மூப்பனார், மூப்பர், குருவிகார வலையர், கண்ணப்பகுல வலையர் என பல பட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் வலையமார்கள் உலகை படைத்த சிவனுக்கே தன் கண்ணை தானமாக கொடுத்த கண்ணப்ப நாயனாரின் வழி வந்தவர்கள் என்ற பெருமையும் தனிசிறப்பாக உடையவர்கள்.
பாரி வள்ளலின் வம்சவழியினர் என்று போற்றப்படும் வலையர்கள் தன் முப்பாட்டனார் பாரி மன்னரின் புகழ் நிலைபெற்றிக்கவும், பாரியின் பெருமையை வரும் சந்ததியருக்கும், உலகிற்கும் எடுத்துறைக்கும் வகையில் வலையர் சமூகத்தின் குல தொழிலான வேட்டையாடுதலை "பாரி வேட்டை" என தங்கள் பாரம்பரியமாகவும், சில இடங்களில் ஆடி மாதம் முதல் நாளன்று தொன்றுதொட்டு வீரமரபு நாகரீகத்துடன் வேட்டைக்குசென்று வலையர் குல வேந்தரின் புகழ் நிலைபெறவும் வழிபாட்டை நடத்திவருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறையாவது பாரிவேட்டை செய்யவேண்டும் என்பது இவர்களின் கட்டாயமான நடைமுறையாக உள்ளது.
பாரிவேட்டையானது பறம்புமலை சுற்றியுள்ள வலையர் நாடுகளான - ஏலூர்பத்து நாடு, மூங்கில்ககுறிச்சி நாடு, பொன்னமராவதி, வலையப்பட்டி நாடு, ஆலவயல் நாடு, தே.கல்லுபட்டி போன்ற நாட்டு பகுதிகளில் உள்ள வலையர் குடிமக்களே பாரி வேட்டை திருவிழாவை கடைபிடித்துவருகின்றனர். மேலும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் பாரி வேட்டை நடத்துகின்றனர். இப்பாரிவேட்டையை வலையர் சமுகத்தினர் மட்டுமே பெருமளவில் ஆங்காங்கே கொண்டாடுகின்றனர் என்பது பாரி மன்னரின் வலையர்குடி பெருமையை போற்றிநிற்கிறது.
'வலையமார்கள்' - பாரி வேட்டைக்கு செல்லும் முன் வலைய அம்பலநாட்டு கூட்டம் நடத்தி தன்இன மக்களுடன் அம்பலம், தலையாரி, சேர்வை, நாட்டாராக தலைமை வழிநடத்தி நல்ல நாள் பார்த்து பாரிவேட்டையின் தேதி அறிவிக்கப்படும்.பின்னர் பாரிவேட்டை அன்று குல தெய்வ வழிப்பாட்டை தொடங்கி சாமி அழைத்து மேளம், ஆட்டம் பாட்டமாக பாரிவேட்டை தொடங்கப்படும். பாரி வேட்டையின் போது தலையில் உருமா கட்டயும், கை கடியல், துப்பாக்கி, வளரி, கூரான ஈட்டி, வேல்கம்பு போன்ற ஆயுதங்களுடன் பாரிவேட்டையாடும் பாரம்பரிய வேட்டை கடைபிடிக்கப்படும்.
வளரி- வலையர்களின் ஆயுதம். |
ஒவ்வொரு ஆயுதமும் தாங்களின் "வலையர் - முத்தரையர்" குலத்தின் பிடாரி, கருப்பசாமி அய்யன், முனியாண்டி, காளி, கருப்பு, பாண்டி, மலையப்பர், அய்யனார், கண்ணப்பர், திருமங்கை ஆழ்வார் என மூதாதையரான தன் குலதெய்வங்களின் ஆயுதங்களை குறிக்கும் வகையாக கொண்டுள்ளனர். பாரி வேட்டை தொடங்கும் முன் வேட்டையாடப்படும் இடத்தில் சிறப்பு பூஜை செய்து ஆன்மிக முறையை முதல்படியாக கொண்டு முறையாக தொடங்குகின்றர். பின்னர் வேட்டையாடிய மிருங்களை வைத்து தெய்வங்களை வணங்கி அப்பகுதியை விட்டு வீடு திரும்புகின்றனர்.
பாரி வேட்டையாடி வந்தபின் பறம்புமலைக்கு தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும். ஆட்டம் பாட்டத்துடன் வேட்டை நிறைவடைந்து பறம்புமலையை பார்த்து வணங்கி வேட்டையாடி மிருங்களை பங்கு பிரிக்கின்றனர். பின் அவற்றை ஒவ்வொருவர் வீட்டிலும் தெய்வங்களுக்கு படையல் வைத்து வணங்கி பின்னரே சாப்பிடுகின்றர்.
பாரி வேட்டை என்பது நீண்ட வரலாற்றையும், வலையர்வழி வேந்தர் பாரியின் புகழ்பாடவும், பண்டைய தொழில் முறை தெரிந்துகொள்ளவும், தெய்வ வழிப்பாட்டை கடைபிடிக்கவும் என பல கருத்துக்களின் அடிப்படையில் புணிதமாக பாரிவேட்டையை முத்தரையர் சமுகத்தினர் நடத்துகின்றனர். பாரி மன்னரின் நேரடி வம்சவழியாக 'முத்தரையர்களே' விளங்குகின்றனர்.