Advertisement

வளரி 'தமிழரின் தொன்மை ஆயுதம்' / VALARIE Weapon Untold Real History

வளரி 

Valarie Weapon


        வளரி என்றால் அது என்ன..? வளரி தோற்றம் எந்த காலம்..? ஏன் தமிழர் வரலாற்றில் இதை தவிர்க்க முடியாத ஓர் சொல்லாக கூறுகின்றனர் என்பதின் உண்மை காரணம் நம்மில் பலருக்கு தெரியாது.

வளரி எனும் இந்தப் பெயர், தமிழ்ச் சமூகத்தின் ஞாபகத்தில் இருந்தே முற்றிலுமாக அழிந்துவிட்டது. வளரி, வளை எறி என்று அழைக்கப்படும் இச்சொல் தமிழரின் ஓர் தொன்மை ஆயுதமாக திகழ்ந்த வரலாற்றை முற்காலத்திய  சுவடுகள் மற்றும் நாவல்கள் மூலமாக அறியமுடிகிறது.

வளரி தோற்றம் :



   பண்டைய காலத்தில் வளரி வேட்டை ஆயுதமாக இருந்தது. பின்னர் தமிழின வரலாற்றில் வளரி எனும் சொல்
வீரத்தின் குறியீடு,
விசையின் குறியீடு,
பரங்கியர் படையை நடுங்கச்செய்த தென்தமிழகத்துப் போர்முறையின் குறியீடாக திகழ்ந்த பெருமைக்குரிய ஆயுதமாக உள்ளது.

தென்னிந்திய ஆய்வுகளின் சான்றுகள் மற்றும் தமிழர் வரலாற்றில் வளரி எனும் சொல் கி.பி‌. 10 - 11 -ம் நூற்றாண்டு காலத்தில் காணமுடிகிறது. இந்த கருவி எப்போது உருவாக்கப்பட்டது என்ற சான்றுகள் அழிந்துள்ளதால் தெளிவாக வளரியின் தொன்ம வரலாறை குறிப்பிட இயலவில்லை.

ஆனால் வளரி என்பது வளை எறி எனும் வேட்டை ஆயுதமாகவும், போர் ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்ட வரலாறும், வளரியை கையாலும் திறமையும், உருவாக்கும் நுண்ணறிவையும் ஓர் பழந்தமிழர் சமூகம் கொண்டிருந்தனர் என்பதை பண்டைய வரலாற்று குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

‘வளரி’ என்பது ஓர் எறி ஆயுதம் ஆகும்.
கரையில் இருந்து எறிந்தால், தண்ணீரின் மீது சீவிச் செல்லும் சித்துக்கல்போல, காற்றின் மீது சீவிச் சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. நின்ற இடத்தில் இருந்து எதிரியைத் தாக்கப் பயன்பட்ட வேல்கம்பு ஆயுதம்.

அதுவே தூரத்தில் சென்று தாக்கவேண்டிய தேவை வந்தபோது, பாய்ந்து செல்லும் குத்தீட்டியாகப் பரிணமித்தது. ஆனால் வளரி என்பது கைவீச்சு வரை போரிட முடிந்த சிறந்த ஆயுதம். இப்போது கையெறியும் தூரம் வரைப் போய்த் தாக்கும் பலமான ஆயுதமாக மாறியது.

வாள் - வளரியானதும் அப்படித்தான். நின்ற இடத்தில் இருந்து எதிரியை வீழ்த்தப் பயன்பட்ட வாள், தூரத்தில் இருக்கும் எதிரியைத் தாக்கவேண்டிய தேவை வந்த போது, காற்றில் சுழன்று பறக்கும் வடிவத்துக்கு வளரி உருவாக்கப்பட்டது.

முதலில் மரத்தால் ஆன வளைஎறி (எ) வளரி பிற்காலத்தில் இரும்பால் உருவாக்கப்பட்ட போர் ஆயுதமாக மாறியது. வாள் ஆயுதம் பிறை நிலவாக வளைந்தது போன்றும், தன்னை தாங்கிப் பிடிக்கும் கைப்பிடியை, வாளின் நுனி வளைந்தும் உருவாக்கப்பட்ட ஆயுதமே -வரலாற்றில் வளரி ஆனது.

நவீன காலத்தில் துப்பாக்கி, ஏவுகணை போன்ற தொழில்நுட்ப ஆயுதங்களை போல, 1500 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதி தமிழினம் அதிசயிக்கத்தக்க திறனை கொண்ட ஓர் ஆயுதத்தை உருவாக்கி பயன்பாடுத்தியுள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கையில் தமிழர்களின் அறிவுத்திறனுக்கு சிறந்த சான்றாக வளரி ஆயுதம் உள்ளது.


வளரி வீசப்படும்போது விசை குறையக் கூடாது. ஆயுதத்தின் எடை கூடினால், நீண்ட தூரம் வீச முடியாது. குறைந்தால், தாக்கும் திறன் குறையும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமானது, ஓர் இரும்புத்துண்டு காற்றில் சுழன்றபடி இலக்கு நோக்கிச் செல்வதற்கு, அடிப்படையான எடைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். ஆயுதத்தின் மையத்தில் நிலைகொண்டுள்ள எடை, அதன் சமநிலையைக் குவித்து, விசையின் பாதையில் துல்லியமாகப் பயணிக்க உதவுகிறது.

இன்றளவும் எவராலும் உருவாக்க இயலாத நுன்னறிவு திறனையும், வியக்கத்தக்க வரலாற்றையும் கொண்டுள்ள வளரி ஆயுதத்தை தமிழன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாக்கி பயன்பாடுத்தியுள்ளான் என்பது வீரச்சரித்திரமாகும்.

வளரியில் துலங்கும் தொழில் நுட்பம், என்றென்றும் அழியாத வலையர் வரலாறு மற்றும் தமிழ் மண்ணுக்குரிய தனித்த சாதனைகளில் ஒன்று.


வளரி வீசிய முத்தரையர் : 

(கி.பி. 11 நூற்றாண்டு)


வளரி வீரன் வீரமல்ல முத்தரையர்.
         
     தமிழர் வரலாற்றில் முதன்மையான பெருமைக்குறிய சான்றாக வளரி வீசிய மன்னன் வீரமல்ல முத்தரையர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை காண அவரின் மதி அமைச்சர் (அ) சேனாதிபதியாக இருக்கும் சிம்ம பெரும்பிடுகு முத்தரையர் (இவர் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன்மாறன் (705-745) முத்தரையர் அல்ல) தம் குலத் தோன்றல் வீரமல்லனை அழைத்து செல்கிறார்.

மூவரும் சந்திப்புக்கு பிறகு மேல் மாடத்திற்க்கு சென்றார்கள், மாடத்தின் பின் பகுதிக்கு அப்பால் வைகை நதி சோம்பலுடன் தவழ்வது தெரிந்தது. கூட்டங்கூட்டமாக வானத்தில் செங்கால் நாரைகள் பறந்து சென்றன.

"உனக்கு நன்றாக வளை எறி வீசத் தெரியுமென்று முத்தரையர் சொல்கிறாரே, இந்த நாரைகளில் ஒன்றை வீசி வீழ்த்துவாயா வீரமல்லா..?" என்றார் பாண்டியர்.

பெரும்பிடுகு முத்தரையர் விரைந்து சென்று, ஒரு வளை எறியைக் (வளரி) கொண்டு வந்து வீரமல்லனிடம் நீட்டினார். வளை எறியை கையில் பிடித்தவுடன் வீரமல்லன் வேறு மனிதனாகி முழு போர்குடி வேட்டையராக மாறி விட்டான்.

"முதல் நாரையா ! இடையில் உள்ளவற்றில் ஒன்றா ! கடைசியில் பறப்பதா?"

சுந்தரபாண்டியர் திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினார். வீரமல்லன் தன் விழிகளை இடுக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டே, "சொல்லுங்கள் மன்னா?" என்று துடித்தான்.

"முதல் நாரை!" என்றார் பாண்டியர். பத்துப் பதினைந்து பறவைகளில் ஏதாவதொன்றை வீழ்த்துவதென்றாலே எவ்வளவு கடினம் என்பதை அறிந்தவர்.

வீரமல்லன் சுழற்றிவிட்ட சின்னஞ்சிறு வளை எறி விர்ரென்று மேலே வட்டமிட்டுச் சென்றது. அது புறப்பட்டது ஒரு திசை, திரும்பியது மற்றொரு திசை. மூன்றாவது திசையில் பறந்துகொண்டிருந்த முதல் நாரை தலைகுப்புறக் கீழே விழுந்து கொண்டிருந்தது.

சுந்தரபாண்டியர் தமது செருக்கையும் மறந்து, "முத்தரையரே ! வீர மல்லன் -  வல்லவன் தான்" என்று பெருமிதத்துடன் வாய்விட்டுக் கூறினார். 

ஆதாரம் : வேங்கையின் மைந்தன் நாவல் மற்றும் ராஜேந்திர சோழன் வரலாறு).


Veera mallan Mutharaiyar
மாவீரன் வீரமல்லன் முத்தரையர்.


நன்றி : வளரி - சு.வெங்கடேசன்.
விகடனில் வந்த கட்டுரை 
நன்றி விகடன்.


வீர வலையரின் வளரி ஆயுதம்


வளரி - VALARIE
    
   வளை எறி, வலைதடி, வலை(யர்) எறி என்றெல்லாம் முற்காலத்தில் அழைக்கப்பட்ட வளரி எனும் ஆயுதமானது, தமிழர்களின் போர் மற்றும் வேட்டை ஆயுதமாகவும், தொன்மை வரலாற்று அடையாளமாகவும் போற்றப்படுகிறது.

ஆனால் வளரி உருவானதும், பயன்படுத்தப்பட்டதும் ஓர் தமிழின அரசமக்களான முத்தரையர் பெருமக்கள் எனும் வரலாற்றையும், வளரியின் தொன்ம தோற்றத்தையும் இதுவரை எவரும் கூறாமல் தமிழின வரலாற்றை அழித்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

தமிழக வரலாற்றில் 2 நூற்றாண்டுக்கு முன்பு தான் ஆங்கிலையருக்கு எதிராக வளரியை படைதளபதிகள் மற்றும் ஒரு சில வீரர்கள் பயன்படுத்தினர் எனும் குறிப்புகளை மட்டும் வைத்து,
வளரியின் ஆயுள் காலத்தை சிறுமைபடுத்தியும், குறிப்பிட்ட சமூக அடையாளமாகவும் சினிமா மற்றும் விளம்பரதாரர்கள் மூலம் தவறாக சித்தரித்து வருகின்றனர்.

ஆனால் 14 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த வளைதடி, வளரி என்பது முத்தரையர்களின் முதன்மை ஆயுதமாக இருந்துள்ளது. வளை எறி எனும் வளரியை உருவாக்கியதும் முத்தரையர் குலத்தை சேர்ந்த வலையர் மக்களே ஆவார்.

இதற்கு சிறந்த சான்றாக கி.பி. 11 நூற்றாண்டு காலத்தில் வீரமல்ல முத்தரையன் வரலாறும், வேங்கையின் மைந்தன் நாவலும் கூறுகிறது..

இன்றளவும் முத்தரையர், அம்பலக்காரர், வலையர், வலையமார்கள் வாழும் பகுதிகளில் வளரி ஆயுதத்தை காணமுடிகிறது.  குலதெய்வ வழிபாட்டில் தனது முன்னோர்களின் வேட்டை மற்றும் காவல் ஆயுதமாகவும் இன்றளவும் வளரி, காவல் ஆயுதங்கள் முத்தரையர் மக்களால் வழிபடப்படுகிறது.


விடுதலை போராட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் பக்க அரனாகவும், வளரி கையாலும் திறனை வரம்செறிந்த தமிழ் மறவர்களுக்கு கற்றுவித்தவர்களும் வலையமார்கள் என்பது நன்கு வரலாறும், வளரியும் பற்றி அறிந்தோருக்கு தெரியும்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக வளரியும், வளரியை கையாலும் வலையர் மக்களும் அழிக்கப்பட்டனர்... வரலாற்றில் ஒடுக்கப்பட்ட நிலையில் தள்ளப்பட்டனர். 

கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கிலேய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், எதிரி சிம்மசொப்பனமாக முத்தரையர் சமுதாயமும், அவர்கள் கையாண்ட வளரி ஆயுதமும் இருந்தது.

கி.பி. 18 -20 காலகட்டத்தில் வலையர், அம்பலக்காரர் எனும் முத்தரையர் சமூகத்தினர் பெரும்பாலும் நாட்டு தலைமைகள், அம்பலம், தலையாரி, காவல்காரர், நிலக்கிழார்களாக முத்தரையர் மக்கள் இருந்ததினால் அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்,

முத்தரையர்களின் வளரி, வேல்கம்பு, காவல் ஆயுதங்கள், உடமை -பொருளாதாரம் அனைத்தையும் பறித்து உள்நாட்டு அகதிகளாகவும், குற்றப்பிரிவினராகவும் குறிப்பிட்டு,
ஆங்கிலேயர் காலத்தில் வீரத்தமிழர்களை பெரிதும் வஞ்சித்தனர்.

வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த ஆயுதமாக போற்றப்படும் வளரியையும், அவ்வாயுதத்தை உருவாக்கி முதன்முதலில் பயன்படுத்திய முத்தரையர் வரலாற்றையும் வரலாறு பேசும் தமிழர்கள் நிச்சயம் உண்மை வரலாற்றை போற்றிட வேண்டும்.

தமிழரின் வீரத்தையும், புத்தி திறனையும் பெருமிதப்படுத்தும் வளரி என்றும் பொதுவானது.

வளரி கலையை இக்கால சந்ததிகள் அனைவரும் கற்கவேண்டும்..!

காலம் மாறினாலும் தமிழ் உணர்வாளர்களால் 
வளரி புகழ் அழியாமல்
வானளவு ஓங்கி நிலைக்கட்டும்...!

வாழ்க தமிழ்...!!
வளர்க வளரி கலை...!!




நன்றி :  அம்பலத்தார் தீனா முத்தரையர்

(வரலாற்று தகவல்கள்)